சென்னையில் சூரிய கிரகணம் தெரிந்தது


சென்னையில் சூரிய கிரகணம் தெரிந்தது
x

சென்னையில் சூரிய கிரகணம் நேற்று தெரிந்தது என்றும், 10 நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது என்றும் பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் கூறினார்.

சென்னை,

சூரியன், நிலா, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகிறது. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழ்கிறது. அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் நேற்று பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது.

சூரியனின் பிம்பம்

இதுகுறித்து பிர்லா கோளரங்க இயக்குனர் (பொறுப்பு) சவுந்திராஜ பெருமாள் கூறியதாவது:-

எதிர்பார்த்தப்படி சூரிய கிரகணம் நேற்று மாலை 5.14 மணியில் இருந்து மாலை 5.44 மணி வரை சுமார் அரை மணி நேரம் நடந்தது. இந்த நிகழ்வு ஆரம்பிக்கும் போது சூரியன் தொடுவானம் அருகில் சென்று விட்டதால் சென்னையில் சூரியனின் பிம்பத்தை 10 நிமிடங்கள் மட்டுமே காண முடிந்தது. நேரடியாக சூரியனின் பிம்பத்தை சூரிய கிரகணம் நடந்த அரைமணி நேரம் வரை மாணவர்கள் மற்றும் பொதுமக்களால் காண இயலவில்லை.

இருந்தபோதும், மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக இணையவழி மூலம் நேரடியாக பகுதி சூரிய கிரகண நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாடுகளில் நடந்த பகுதி சூரிய கிரகண நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பபட்டன.

அடுத்த சூரிய கிரகணம்

இந்தியாவில் மும்பையில் 30 சதவீதமும், ஜம்முவில் 50 சதவீதமும் கிரகணம் நடைபெற்றது.

ரஷியாவின் தெற்கு பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் காண முடிந்தது. தமிழகத்தில் அடுத்த சூரிய கிரகணம் வருகிற 2027-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந் தேதி பகுதி சூரிய கிரகணத்தை காணலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story