சூரியனை ஆய்வு செய்யும் விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்
சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படுகிறது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.
நாகர்கோவில்:
சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படுகிறது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.
சோதனை ராக்கெட்டுகள்
இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் நேற்று நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி4 என்ற 54-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வருகிற 26-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளும், 8 வணிக ரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட உள்ளன.
அடுத்த கட்டமாக எஸ்.எஸ்.எல்.வி., ககன்யான் செயற்கை கோள் போன்றவைகளும் செலுத்தப்பட உள்ளன. நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு பல்வேறு கட்ட சோதனை ராக்கெட்டுகள் செலுத்த வேண்டி இருக்கிறது. எனவே அந்த சோதனைகள் நடைபெறும். ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு 2 முக்கிய காரணங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. ககன்யான் ராக்கெட்டில் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பு குறித்து கவனிக்க வேண்டும்.
பூமியில் இருப்பது போன்று...
அதற்கு தகுந்த வகையில் ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும். விண்ணில் அவர்கள் இருக்கும் போது அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதாவது பூமியில் இருப்பது போன்ற நிலையை அங்கு உருவாக்க வேண்டும். இதுதொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகிறது.
அதைப் போன்று மனிதர்கள் விண்ணில் செல்லும் போது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அவர்கள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக பூமியில் வந்து இறங்கும் வகையில் சோதனைகள் நடத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து ரோபோவை விண்ணில் அனுப்பும் சோதனை நடைபெறும். அது வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு அது பாதுகாப்பான பயணமா? என்பது உறுதி செய்யப்படும். பின்னர் ககன்யானில் மனிதனை அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது ககன்யான் விண்கலம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. அந்த சோதனைகள் அனைத்தும் இதுவரையிலும் வெற்றி பெற்றுள்ளன.
சூரியனை ஆய்வு செய்ய...
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு இது விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அது சாதாரண ஆர்பிட் போல் இல்லாமல் லிபரேஷன் பாயிண்ட் ஒன்று வைத்து அங்கு செயற்கைகோளை செலுத்தி சோதனை செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. அது சூரியனை ஆய்வு செய்யும்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில ஆர்ஜிதப் பணிகள் முடிவடைந்து விட்டன. கட்டுமான பணிகள் அங்கு தொடகப்பட உள்ளன. அதற்கு முன்னதாக அங்கு மண் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். செயற்கைக்கோள் செலுத்தும் போது அதன் நிலையை அந்த பகுதி தாங்குமா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறிவியல் அருங்காட்சியகம்
அதன்பிறகு சிவன் அஞ்சுகிராமத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, 'கன்னியாகுமாியில் இஸ்ரோவின் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்க திட்டம் உள்ளது. அதற்கு நிலம் மாநில அரசு வழங்கிய நிலையில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. நேவிக்கருவி விரைவில் மீனவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சந்ராயன்-2 மிஷன் புது தொழில் நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன் தோல்வியால் கிடைத்த பாடத்தால் அடுத்த மிஷனில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்' என்றார்.