உசிலம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் திடீர் சாவு
உசிலம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் திடீரென்று இறந்தார்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களது 2-வது மகன் சார்லஸ் (வயது 28). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை அசாம் மாநிலம் புனேவில் பணியாற்றி வந்தவர் பணி மாறுதலுக்கான 10 நாட்கள் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பணி மாறுதல் பெற்ற ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் ராணுவ தளத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு உடல்நலக்குறைவு காரணமாக சார்லஸ் உயிரிழந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர் சார்லசின் உடல் இன்று(வியாழக்கிழமை) மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து சொந்த ஊரான செல்லம்பட்டியில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இவருக்கு அனிதா என்ற மனைவியும், 10 மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளன. இவரது உடன் பிறந்த சகோதரான மதன் என்பவரும் ராணுவத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ராணுவ வீரர் சார்லஸ் இறந்ததை அறிந்தது அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.