நிழற்குடை இருக்கையில் சிக்கிய ராணுவ வீரரின் கால்
கொட்டாரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இருக்கை கம்பிகளுக்கு இடையில் ராணுவ வீரரின் கால் சிக்கியது. அவரை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தென்தாமரைகுளம்,
கொட்டாரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இருக்கை கம்பிகளுக்கு இடையில் ராணுவ வீரரின் கால் சிக்கியது. அவரை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
ராணுவ வீரர்
கொட்டாரம் சந்திப்பில் நாகர்கோவிலுக்கு செல்லும் ரோட்டில் பஸ் நிறுத்த நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் அமர்வதற்காக இரும்பு கம்பிகளால் இருக்கை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தென்தாமரைகுளம் அருகே உள்ள இலந்தையடிவிளையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் லிங்கம் (வயது 58) என்பவர் நாகர்கோவிலுக்கு பஸ்சில் செல்வதற்காக வந்தார். அவர் அந்த பயணிகள் நிழற்குடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார். அப்போது திடீரென அவரது கால் இருக்கை கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது.
பத்திரமாக மீட்டனர்
உடனே அவர் தனது காலை எடுக்க முயன்றார். ஆனால் அவரால் தனது காலை கம்பிகளுக்கு இடையே இருந்து எடுக்க முடியவில்லை. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். இதுகுறித்து அங்கு நின்று மற்ற பயணிகள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஜவகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அதிநவீன கருவி உதவியுடன் இரும்பு கம்பிகளை வெட்ட தொடங்கினர். இறுதியில் ஒரு மணி நேரம் போராடி ராணுவ வீரரின் காலை பத்திரமாக மீட்டனர்.
இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட முன்னாள் ராணுவ வீரர் லிங்கம் அங்கிருந்து பஸ்சில் ஏறி தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.