சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு


சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
x

சிறுவர்கள் தப்பியோடியது, பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டது குறித்து சிறப்புகுழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்

அமைச்சர் ஆலோசனை

வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் உள்ளது. இங்கிருந்து கடந்த 27-ந் தேதி 6 சிறுவர்கள் தப்பிச் சென்றனர். தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள மற்ற சிறுவர்களில் ஏ பிளாக்கில் உள்ள சிலர் அங்குள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் 12 சிறுவர்கள் மீது வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விரைவில் பிடிபடுவார்கள்

வேலூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் 6 சிறுவர்கள் தப்பிச் சென்றனர். இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கிடையே சிறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளையும் அவர்கள் எதிர்த்து உள்ளனர். அனைத்து தரப்பு அலுவலர்களும் அங்கு சென்று அறிவுரை வழங்கி உள்ளனர். தற்போது அமைதியான சூழலில் உள்ளனர்.

எதனால் இந்த பிரச்சினை நடந்தது?, இதுபோன்ற நிகழ்வு எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாக இன்று (நேற்று) அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலெக்டர் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு அரசுக்கு சில பரிந்துரைகள் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று இனி பிரச்சினைகள் நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தப்பியோடியவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பிடிக்கப்பட்டு இல்லத்தில் அடைக்கப்படுவார்கள்.

அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

இளைஞர் நீதிச் சட்டதிட்டத்தின் கீழ் இந்த இல்லம் இயங்குகிறது. இங்கு சிறு குற்றம் செய்து 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் வழக்கு நிலுவையில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், மிகக்கொடுங்குற்றம் செய்தவர்கள் உள்ளனர்.

இவ்வாறு பலதரப்பட்ட வயது அடிப்படையில் சிறுவர்கள் உள்ளே உள்ளதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்படுகிறது. இதை தடுக்கவும், முடிவு எடுக்கவும் கலெக்டர் மற்றும் அலுவலர்கள் கொண்ட சிறப்பு குழு அமைத்து அக்குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இல்லத்தில் உள்ள சிறுவர்கள் அங்குள்ள பொருட்களையே உடைத்து ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இதனால் பணி பாதுகாப்பு வேண்டும் என பணியாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு நல்ல முடிவு எடுக்கப்படும். தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இங்கு மட்டுமில்லாமல் பல இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது. சிறுவர்கள் குழுக்களாக சேர்ந்து தங்களது காரியத்தை சாதித்து கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். அதை நிறைவேற்ற முடியாது. அனைத்தும் இளைஞர் நீதிச் சட்டப்படி தான் முடிவு எடுக்கப்பட வேண்டும். இதில் அரசு தலையிட முடியாது. உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறும் பணியாளர்கள் ஏன் இந்த பணிக்கு வந்தனர். இந்த பிரச்சினை சரிசெய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளியே இருந்து உணவு

இல்லத்தில் தங்கி உள்ள சிறுவர்களுக்கு வெளியில் இருந்து உணவு வாங்கி கொடுப்பதாகவும், அதன் காரணமாக அவர்கள் வெளி உணவு கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், இல்லத்தில் இருந்த சிறுவர்கள் சம்பவத்தன்று இரவு சாப்பிடாமல் இருந்தனர். எனவே நல்ெலண்ண அடிப்படையில் தான் அவர்களுக்கு உணவு வாங்கி கொடுக்க நான் கூறினேன். இது அவர்களை ஆற்றுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றார்.

இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு இல்லத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மை செயலாளர் ஷன்சொங்கம்ஜடக்சிரு, சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் அமர்குஷ்வாஹா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story