இறையடியார் அந்தோணி சூசைநாதருக்கு சிறப்பு பிரார்த்தனை


இறையடியார் அந்தோணி சூசைநாதருக்கு சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மறைமாவட்ட ஆலயங்களில் இறையடியார் அந்தோணி சூசைநாதருக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியை சேர்ந்த இறையடியார் அந்தோணி சூசைநாதர் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் பணியாற்றினார். இவர் 29 ஆண்டுகள் மறைமாவட்ட குருவாகவும், 29 ஆண்டுகள் ஜெபமாலை தாசர் சபை துறவியாகவும் பணியாற்றினார்.

இவர் உவரியில் பணியாற்றிய போது பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபையை நிறுவினார். இந்த சபை தற்போது 52 பங்குகளுக்கு பரவி இருக்கிறது. இவர் 1968-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி உயிர் துறந்தார். இவருக்கு, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்திலும், உவரி புனித அந்திரயா மற்றும் புனித அந்தோனியார் கோவிலிலும் மார்பளவு சிலையும், தூத்துக்குடி கீழ அலங்காரத்தட்டு உபகார மாதா ஆலய பங்கில் முழு உருவச்சிலையும் உள்ளது.

இவரை 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி போப் 16-ம் பெனடிக் இறையடியார் நிலைக்கு உயர்த்தினார். 2015-ம் ஆண்டு ஜனவரி 13-ந் தேதி தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் இறையடியார் அந்தோணி சூசைநாதருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான சிறப்பு அமர்வு ஆய்வு பணி தொடங்கப்பட்டு, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முடிவடைந்தது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அவர் உயிர் துறந்த நாளான நேற்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆலயங்களில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.இதே போன்று தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் இல்லத்தில் உள்ள மதுவிலக்கு சபை அலுவலகத்தில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினர்.


Next Story