முன் விரோத நிவர்த்திக்கு வினோத வழிபாடு


முன் விரோத நிவர்த்திக்கு வினோத வழிபாடு
x
தினத்தந்தி 4 July 2023 12:01 AM IST (Updated: 4 July 2023 12:01 AM IST)
t-max-icont-min-icon

முன் விரோத நிவர்த்திக்கு வினோத வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை

கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் நரிக்குறவர் காலனியில் பெருமாள், காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காளி பூஜை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பெருமாள் பூஜையுடன் தொடங்குகிறது. நாளை (புதன்கிழமை) பால்குடம், பறவைக்காவடி எடுத்தல், மாவிளக்கு பூஜையும் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 6-ந் தேதி ஆட்டு கிடாய்கள், எறுமைகள் அறுத்து பலியிடும் நிகழ்வும், 7-ந் தேதி மது எடுப்பு விழாவும் நடக்கிறது. திருவிழாவையொட்டி நேற்று காளியம்மன் கோவில் அருகே பெரியவர்கள், சிறியவர்கள் என ஏராளமானோர் குளிர்பானங்களை வாங்கி வந்து அம்மனை வழிபட்டு குளிர்பானங்களை தரையில் ஊற்றி நிவர்த்தி செய்யும் சம்பவம் வினோதமாக இருந்தது. இதுகுறித்து குளிர்பானங்களை தரையில் ஊற்றியவர்கள் கூறுகையில், கடந்த ஒரு வருடத்தில் தெரிந்தோ தெரியாமலோ எங்களுக்குள் ஏதேனும் காரணங்களால் முன்விரோதத்தால் சின்ன சின்ன பிரச்சினைகள் நடந்திருக்கும். அப்போது கடவுளே நீ இருந்தா கேள் என்று கோபத்தில் கடவுளிடம் முறையிட்டு சொல்லி இருப்போம். ஆனால் குலதெய்வத்தை பூஜை செய்து வழிபடும் போது யாருக்கும் எந்த பிணக்கும் இருக்க கூடாது. அனைவரும் சேர்ந்து காளி பூஜை செய்து ஒற்றுமையாக சாப்பிடனும். அதற்காக தான் காளியை வழிபட்டு கலரை (குளிர்பானம்) தரையில் ஊற்றினால் கடந்த ஒரு வருடத்தில் நடந்த அத்தனை பிணக்குகளும் காணாமல் போகும். மேலும் நிம்மதியாக பூஜை செய்யலாம், என்றனர்.


Next Story