சாணார்பட்டி அருகே டிராக்டரின் ஏர்கலப்பையில் சிக்கி மாணவன் பலி
சாணார்பட்டி அருகே டிராக்டரின் ஏர்கலப்பையில் சிக்கி மாணவன் பலியானான்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறையை சேர்ந்தவர் சுதாகர். விவசாயி. அவருடைய மகன் சூர்யா (வயது 13). இவன், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவன், சாணார்பட்டி அருகே மந்தநாயக்கன்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தான். அந்த ஊரை சேர்ந்தவர் கதிரவன் (25). டிராக்டர் டிரைவர். இவரிடம், சூர்யா அறிமுகம் ஆகி பழகினார்.
இந்தநிலையில் நேற்று மதியம் கதிரவன், அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு உழவு பணிக்காக டிராக்டரை எடுத்து சென்றார். அவருடன் சூர்யாவும் சென்றுள்ளான். இதையடுத்து டிராக்டரின் பக்கவாட்டில் சூர்யாவை அமர வைத்துவிட்டு, கதிரவன் டிராக்டரில் உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று சூர்யா நிலைதடுமாறி டிராக்டரில் இருந்து கீழே விழுந்தான். இதில், டிராக்டரின் ஏர் கலப்பையில் சிக்கிய சூர்யா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.