கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவர் பலி


கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவர் பலி
x

கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மாணவர் பலியானார்.

தேனி

கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் செல்லப்பாண்டி (வயது 17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு, கல்லூரியில் சேருவதற்கான முயற்சிகளை செய்து வந்தார். இதையொட்டி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்காக அவர் நேற்று தனது நண்பரான தருண்பாண்டியுடன் (17) மோட்டார் சைக்கிளில் கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை செல்லப்பாண்டி ஓட்டினார். கம்பத்தில், சுருளிப்பட்டி சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே அவர்கள் வந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட செல்லப்பாண்டி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தருண்பாண்டி காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது காயமடைந்த தருண்பாண்டியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் செல்லப்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான சுருளிப்பட்டி காந்திஜி தெருவை சேர்ந்த சரவணக்குமார் (30) என்பவரை கைது செய்தனர்.


Next Story