பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி மாணவர் பலி


பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி மாணவர் பலி
x

நெல்லையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடைக்காக வார்டு தோறும் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. இதற்காக பாளையங்கோட்டை சாந்திநகர் சாந்தா காலனி பகுதியில் 25 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி நீரேற்று நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அங்கு நீரேற்று நிலையம் அமைக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் அந்த பள்ளத்தில் மழைநீர் நிரம்பி கிணறு போல் காட்சியளித்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அதில் தினமும் குளித்து வந்தனர். நேற்று மாலை மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்த 7-ம் வகுப்பு படித்து வந்த மனோஜ் (வயது 12) உள்பட 5 மாணவர்கள் அந்த தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது மனோஜ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து சென்று 3 மணி நேரம் போராடி மனோஜின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனோஜ் தானாக தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story