கம்பத்தில் ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி காயம்
மின்தடையை சரி செய்ய கம்பத்தில் ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி காயம் அடைந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்தவர் உமேஷ் (வயது 20). அக்ரகாரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது வீட்டில் கடந்த 2 நாட்களாக குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனை தானே சரி செய்வதாகக் கூறி வீட்டின் எதிரே இருந்த மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தீக்காயம் அடைந்த உமேஷ் மின்கம்பத்தில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த வாணியம்பாடி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.