அருவியில் குளிக்க சென்ற மாணவர் பாறையில் வழுக்கி விழுந்து பலி
அருவியில் குளிக்க சென்ற மாணவர் பாறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள பச்சைமலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக அளவில் மழை பெய்ததால், அம்மம்பாளையம் வரையாற்று அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனை பார்ப்பதற்காக துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் துறையூர் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். டிரைவர். இவரது மகன் கோகுல் (வயது15). இவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று கோகுல், தனது நண்பருடன் வரையாற்று அருவியில் குளிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அருவியில் தண்ணீர் கொட்டும் பகுதியில் உள்ள மலையில் ஏறி குளிக்க சென்றபோது, அருவி அருகே உள்ள பாறையில் கோகுல் வழுக்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருவியில் குளிக்க சென்ற மாணவர் பாறையில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.