தந்தை இறந்த நிலையிலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி
தந்தை இறந்த நிலையிலும் மாணவி 10-ம் வகுப்பு தேர்வு எழுத வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சிவகாசி,
தந்தை இறந்த நிலையிலும் மாணவி 10-ம் வகுப்பு தேர்வு எழுத வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பட்டாசு தொழிலாளி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வடமலாபுரம் சோரம்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 45). இவருக்கு கலா என்ற மனைவியும், முத்துச்செல்வி, முகிலா என்ற மகள்களும் உள்ளனர். முத்துசாமி, கலா இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளர்களாக வேலைபார்த்து வந்தனர். முத்துச்செல்வி 10-ம் வகுப்பும், முகிலா 7-ம் வகுப்பும் திருத்தங்கலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு முத்துசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நோயின் தாக்கம் அதிகமான நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அவர் இறந்துவிட்டார். அவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முத்துசாமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
தேர்வு எழுதினார்
தந்தை இறந்த துக்கத்திலும், மூத்த மகள் முத்துச்செல்வி நேற்று 10-ம் வகுப்பு கணிதத்தேர்வு எழுத பள்ளிக்கு சென்றார். முத்துச்செல்வியை உறவினர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தேர்வு மையத்துக்கு அழைத்து வந்தார்.. தேர்வு எழுதி முடித்த பின்னர் தன்னுடன் படிக்கும் சக மாணவ, மாணவிகளிடம் தனது தந்தை இறந்த தகவலை கூறி அழுதார்.
முத்துச்செல்விக்கு சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் பள்ளியில் இருந்து உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். உறவினர்களும் மாணவி முத்துச்செல்விக்கு ஆறுதல் கூறினர். இது நெகிழ்ச்சிைய ஏற்படுத்தியது.