படிக்கட்டில் தொங்கிய மாணவரின் புத்தக பை சிக்கி இரும்பு தடுப்பு விழுந்தது-பெண்ணின் கை விரல் துண்டானது


படிக்கட்டில் தொங்கிய மாணவரின் புத்தக பை சிக்கி இரும்பு தடுப்பு விழுந்தது-பெண்ணின் கை விரல் துண்டானது
x

படிக்கட்டில் தொங்கிய மாணவரின் புத்தக பை சிக்கி இரும்பு தடுப்பு விழுந்தது. இதில் பெண்ணின் கை விரல் துண்டானது.

திருச்சி

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து ஓலையூருக்கு அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று மாலை புறப்பட்டது. திருச்சி பாரதியார் சாலையில் உள்ள பள்ளி அருகே உள்ள பஸ்நிறுத்தத்தில் அந்த பஸ் நின்ற போது அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்கள் பஸ்சில் ஏறியுள்ளனர். அவர்களை கண்டக்டரும், டிரைவரும் இறங்கும்படி கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் டிரைவர் பஸ்சை ஜங்ஷன் நோக்கி ஓட்டி வந்தார். மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்தனர்.

இந்தநிலையில், ரெயில் அருங்காட்சியகத்தை கடந்து, ரெயில் நிலைய 2-வது நுழைவு வாயில் முன் இரும்பு தடுப்புகள் போடப்பட்டு இருந்தது. பஸ் அந்த தடுப்புகளை கடந்து சென்ற போது, படிக்கட்டில் தொங்கிய மாணவனின் புத்தக பை இரும்பு தடுப்பில் சிக்கியது. இதனால் பஸ் சென்ற வேகத்தில் இரும்பு தடுப்பு கீழே விழுந்தது.

அப்போது, இரும்பு தடுப்பு அருகே நின்று கொண்டிருந்த பண்ருட்டியை சேர்ந்த ஜெயபால் மனைவி கொளஞ்சி (வயது 55) மீது விழுந்தது. இதில் அவருடைய இடது கையின் சுண்டுவிரல் துண்டானது. இதைத்தொடர்ந்து அந்தவழியாக வந்தவர்கள், அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவர் பாபுவிடம் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story