சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூக நீதி கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூக நீதி கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
கருப்பூர்:
பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 27 துறைகளில் வேலை பார்க்கும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்களுக்கு, பதவி உயர்வு, பணி நியமனம் மற்றும் முக்கிய பொறுப்புகள் வழங்குவதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசுக்கும், உயர்கல்வித்துறை செயலாளருக்கும் புகார்களை அனுப்பினர். அதில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும், பணி நியமனம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சமூக நீதி கண்காணிப்பு குழுவுக்கு அரசு உத்தரவிட்டது.
ஆய்வு
இந்தநிலையில் சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப. வீரபாண்டியன் தலைமையில், குழு உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தனபால் மற்றும் சுவாமிநாதன் தேவதாஸ், ஜெய்சன், கருணாநிதி, மனுஷ்யபுத்திரன், சாந்தி ஆகியோர் நேற்று பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தனர். அவர்களை பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் கோபி (பொறுப்பு), ஆய்வு மைய இயக்குனர் சுப்பிரமணி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் வரவேற்றனர்.
இதையடுத்து சமூக நீதி கண்காணிப்பு குழுவினர் ஒவ்வொரு துறை வாரியாக நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தி, கருத்துகளை கேட்டறிந்தனர்.
சமூக நீதி
பின்னர் கண்காணிப்பு குழு தலைவர் சுப.வீரபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு அமைத்துள்ள சமூக நீதி கண்காணிப்பு குழு, மாநிலம் முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு கல்வி நிறுவனங்களில் சமூக நீதி பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக முதலில் குழுவினர் பெரியார் பல்கலைக்கழகம் வந்துள்ளோம். துணை வேந்தர், பதிவாளர்களிடம் ஆவணங்கள், தகவல்களை கேட்டு பெற்றோம். மேலும் துறை வாரியாக சென்று ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வு அறிக்கை தமிழக அரசுக்கு வழங்கப்படும். அதன்பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் சமூகநீதி பின்பற்றப்படுவது குறித்து, உண்மை மற்றும் பொய் புகார்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் ஆய்வு செய்யப்படும்.
சுற்றறிக்கை
2020-2023-ம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழகங்கள், அரசு கல்வி நிறுவனங்களில் சமூக நீதி மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது. இதில் தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.