சாலையில் திடீர் விரிசல்; வாகன ஓட்டிகள் பீதி


சாலையில் திடீர் விரிசல்; வாகன ஓட்டிகள் பீதி
x

அவலாஞ்சி-எடக்காடு இடையே உள்ள சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

அவலாஞ்சி-எடக்காடு இடையே உள்ள சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.

சாலையில் விரிசல்

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி சந்திப்பில் இருந்து எடக்காடு, பிக்கட்டி, மஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கு சாலை செல்கிறது. 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் அவலாஞ்சி சந்திப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாலையில் திடீரென 10 மீட்டர் நீளத்திற்கு விரிசல் மற்றும் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. சாலையின் நடுவே விரிசல் உள்ளதோடு, ஒருபுறம் சற்று இறங்கி இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.

கவனமாக செல்ல அறிவுறுத்தல்

இதைத்தொடர்ந்து சாலையில் விரிசல் உள்ள இடத்தில் செல்லாமல் இருக்க, வாகனங்கள் சாலையோரம் சென்று வருகிறது.

தற்போது பெய்த தொடர் மழை காரணமாக அந்த பகுதியில் சாலையோரம் ஈரப்பதம் மிகுந்து காணப்படுவதால் வாகனங்கள் கீழே இறங்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது விரிசல் ஏற்பட்ட இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையிலும் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் சாலையில் ஏற்பட்டு உள்ள விரிசல் மற்றும் பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதேபோல் எல்லகண்டியில் இருந்து நஞ்சநாடு செல்லும் சாலையிலும் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலை விரிசல்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story