கோவில்பட்டியில்பொதுமக்கள் திடீர் போராட்டம்
கோவில்பட்டியில்பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட பாலத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
மாலையம்மன் கோவில்
கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள நீர்வரத்து ஓடையின் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையடுத்து கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையின் மீது கட்டப்பட்டிருந்த கடைகள் கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் இடித்து அகற்றப்பட்டன. இந்நிலையில் நீர்வரத்து ஓடையின் மேல்புறம் வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட பழமையான மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் நிர்வாகம் பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக ஓடையின் மீது தற்காலிக இரும்பு பாலம் அமைத்து இருந்தது. தற்போது இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகம் சார்பில் பிரதான சாலைக்கும், கோவிலுக்கும் இடையே நீர் வரத்து ஓடையின் மீது இருந்த தற்காலிக இரும்பு பாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக காங்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது.
இதனை கண்டித்து நேற்று நீர்வரத்து ஓடை மீட்பு குழுவினர், உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய உதவி கலெக்டர் மகாலட்சுமி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
போராட்டம்
இதனை அறிந்த வணிக வைசிய சமுதாயத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும், சமுதாய தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன் தலைமையில் பாலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை காங்கிரீட் பாலத்தில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் தாசில்தார் சுசீலா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, சுகாதேவி, மங்கையர்கரசி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் பாலத்தை அகற்ற தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.