உளுந்தூர்பேட்டை அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உ பெரியப்பட்டு கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஹரிபுத்திர அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபடுவது தொடர்பாக பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் அருகில் உள்ள ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள், ஹரிபுத்திர அய்யனார் கோவில் சிலையை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெரியப்பட்டு கிராமத்தில் ஹரிபுத்திர அய்யனார் கோவில் திருவிழாவை நடத்துவதற்காக, ஈஸ்வரகண்டநல்லூர் கிராம முக்கியஸ்தர்களிடம் சாமி சிலையை கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் கடலூர்-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் செல்வராஜ், திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஈஸ்வரகண்டநல்லூரில் உள்ள சாமி சிலையை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் எடுத்து செல்லப்படும். மேலும் யாரும் திருவிழாவை நடத்தக்கூடாது, ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.