சேலம் அருகே சமத்துவபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
சேலம் அருகே கோனூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வசிக்கும் மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
சேலம்,
சேலம் மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வந்தார். நேற்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்று (திங்கட்கிழமை) தண்ணீர் திறந்து வைக்கிறார். இதற்காக சேலத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை மேட்டூருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது அவர், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் கோனூர் ஊராட்சியில் கடந்த 1998-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு நேரில் சென்று திடீரென பார்வையிட்டார்.
நன்றி தெரிவித்தனர்
இந்த சமத்துவபுரத்தில் உள்ள 94 வீடுகளுக்கு வர்ணம் பூசுதல், சிறு பழுது நீக்குதலுக்கு ரூ.47 லட்சமும், சாலை, குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம், சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, சமத்துவபுர வளைவு ஆகிய இதர பொது கட்டமைப்புகளுக்கான பழுது நீக்கப்பணிகளுக்கு ரூ.44 லட்சமும் கடந்த 2021-2022-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்து அங்குள்ள வீடுகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, அங்கு வசிக்கும் மக்கள், அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தனர். மேலும் சமத்துவபுரத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுத்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த ஆய்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.