டிக்கெட் எடுக்க ஏற்படும் நெரிசலை கட்டுபடுத்த தடுப்புகள் அமைப்பு
அரக்கோணம் ரெயில்நிலையத்தில் டிக்கெட் எடுக்க ஏற்படும் நெரிசலை கட்டுபடுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டது.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காட்பாடி மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், பல மாநிலங்களுக்கும் அதிக அளவில் பயணிகள் செல்கின்றனர். இதனால் அலுவலக நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக டிக்கெட் கவுண்ட்டர்களில் டிக்கெட் எடுப்பதில் நெரிசல் ஏற்பட்டு பயணிகளிடையே அவ்வபோது சண்டைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் டிக்கெட் கவுண்ட்டர் முன்பு பயணிகள் வரிசையாக வந்து டிக்கெட் எடுக்கும் வகையில் ஸ்டீல் கம்பிகளை கொண்டு நிரந்தர தடுப்பை அமைத்துள்ளனர்.
ரெயில் நிலையம் அருகே உள்ள இரட்டை கண் பாலத்தில், ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பழனிபேட்டை பகுதியில் இருந்து ரெயில் நிலையம், பஜார் மற்றும் பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள், மோட்டார் சைக்கிளில் வருபவர்களும் பாலத்தில் தேங்கி நிற்கும் நீரால் விபத்துகளுக்கு ஆளாகின்றனர். எனவே, இதனை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு ரெயில்வே துறை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.