கல்லால் தாக்கிய தையல் தொழிலாளி சாவு
பரமத்தி அருகே கல்லால் தாக்கிய தையல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்
தையல் தொழிலாளி
பரமத்தி கபிலர்மலை சாலையில் வசிப்பவர் ராஜா (வயது 44) தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பரமத்தி அருகே உள்ள வில்லிபிளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (49), கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த 27-ந் தேதி இவர்கள் இருவரும் பரமத்தி அருகே உள்ள பில்லூர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி உள்ளனர்.
அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோவிந்தன் ராஜாவை கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கொலை வழக்கு
இது குறித்தி பரமத்தி போலீசார் கோவிந்தன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடிதடி வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை பரமத்தி போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.