வேலையை குறை கூறியதால் ஆத்திரம்: சக ஊழியரை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற தையல்காரர்
கோடம்பாக்கத்தில் சக ஊழியரை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற தையல்காரரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 9-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர், கோடம்பாக்கத்திலேயே ஒரு கடையில் தையல்காரராக பணியாற்றி வந்தார். இவருடன் கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த மாதவன் என்பவரும் தையல்காரராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் கடையில் பணியாற்றி கொண்டிருக்கும்போது, சரவணன் சரியாக துணி தைக்கவில்லை என்று மாதவன் கூறினார். தன்னை குறை கூறியது பொறுக்காமல் மாதவனுடன், சரவணன் வாக்குவாதம் செய்தார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போக ஆத்திரமடைந்த மாதவன் அருகே இருந்த கத்திரிக்கோலை எடுத்து சரவணனை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சரவணன் துடிதுடித்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த மாதவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கு ஆயுதமாக இருந்த கத்திரிக்கோல் பறிமுதல் செய்யப்பட்டது. சாதாரண வாக்குவாதத்தில் தொடங்கி கொலையில் முடிந்த இந்த சம்பவம் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.