மேலப்புலம் புதூர் செல்லும் பாதையில் தார் சாலை அமைக்க வேண்டும்


மேலப்புலம் புதூர் செல்லும் பாதையில் தார் சாலை அமைக்க வேண்டும்
x

உத்திரம்பட்டில் இருந்து மேலப்புலம் புதூர் செல்லும் பாதையில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் க.மனோகரன் கோரிக்கை வைத்து உள்ளார்.

ராணிப்பேட்டை

உத்திரம்பட்டு ஊராட்சி

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உத்திரம்பட்டு ஊராட்சி உள்ளது. இதில் உத்திரம்பட்டு, உத்திரம் பட்டு காலனி ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக அதே பகுதியை சேர்ந்த க.மனோகரன் உள்ளார். ஊராட்சியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

திட்ட பணிகள்

உத்திரம்பட்டு குளக்கரை தெருவில் ரூ.7 லட்சத்து 16 ஆயிரத்தில் சிமெண்டு சாலை, ஒத்தவாடை தெருவில் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்திலும், அதே பகுதியில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தில் கழிவு நீர் கால்வாய்கள், உத்திரம்பட்டு மேட்டு தெருவில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்திலும், அதே பகுதியில் ரூ.82 ஆயிரத்திலும் கழிவு நீர் கால்வாய்கள், உத்திரம்பட்டு காலனியில் ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தில் பைப் லைன் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

உத்திரம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5 லட்சத்து 91 ஆயிரத்தில் கழிப்பிடம், காலனியில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்தில் நெற்களம் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. உத்திரம்பட்டு காலனி சுடுகாடு செல்லும் சாலையில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்திலும், அங்கன்வாடி செல்லும் சாலையில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தில் சிறுபாலங்கள், அதே பகுதியில் உள்ள ஆலமரத்து குட்டை ரூ.10 லட்சத்து 29 ஆயிரத்தில் தூர்வாருதல், ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்தில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கு, உத்திரம்பட்டு காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ.4 லட்சத்து 4 ஆயிரத்தில் சுற்றுச்சுவர், அதே பகுதியில் ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்தில் சிமெண்டு சாலை உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது.

தார்சாலை

பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் மூலம் 15 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது. ஊராட்சியில் பனை விதைகள், மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம், சமுதாய கூடம், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம், நாடக மேடை, உத்திரம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சமையல் அறை, உத்திரம்பட்டு காலனி சுடுகாட்டிற்கு சுற்று சுவர், சிமெண்டு சாலை, குடிநீர் பைப் லைன், மின்விளக்கு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும், உத்திரம்பட்டு கிராமத்தில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மேலப்புலம்புதூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு சைக்கிள், ஆட்டோ ஆகியவற்றில் சென்று வருகின்றனர்.

அவர்கள் செல்லும் சாலை மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி விடுவதால் அந்த வழியாக செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் உத்திரம்பட்டு கிராமத்தில் இருந்து மேலப்புலம் புதூர் வரை செல்லும் சாலையை தார் சாலையாக மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழங்குடியின மக்களுக்கு இலவச வீடு

உத்திரம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் அருகே பழங்குடியின மக்கள் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அதே பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் மாற்று இடம் வழங்கி பட்டா வழங்கி இலவச வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வளர்ச்சி பணி குறித்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. நான் தினமும் ஊராட்சி பகுதிகளில் மக்களுக்கு அடிப்படை தேவைகள் என்ன என்பதை அறிந்து அதை உடனுக்குடன் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். தடையில்லாமல் குடிநீர் கிடைக்க புதிய ஆள் துளை கிணறுகள், குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளில் புதிய குழாய்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மின் விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிய மின் விளக்குகள் பொருத்தவும், பழுதடைந்த மின் விளக்குகளை உடனுக்குடன் மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உத்திரம் பட்டு ஊராட்சியை அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் முதன்மையான ஊராட்சியாக மாற்ற கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம்.முனிரத்தினம், காவேரிப்பாக்கம் ஒன்றியக் குழு தலைவர் அனிதா குப்புசாமி, துணைத்தலைவர் முனியம்மாள் கணேசன், மாவட்ட கவுன்சிலர் ந.சக்தி ஆகியோரின் ஒத்துழைப்போடு காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.பாலாஜி ஆலோசனையுடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கு.கம்சலா குமரன், வார்டு உறுப்பினர்கள் து.சம்பத், மு.ரமேஷ், உமா ஆனந்தன், அ.தேவராஜ், பிரியா பெருமாள், ஊராட்சி செயலாளர் ப.சங்கர் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு மாற்றுவேன் என்று ஊராட்சி மன்ற தலைவர் க.மனோகரன் தெரிவித்து உள்ளார்.


Next Story