மத்திய அரசின் பயிற்சி அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர்
வளர்ச்சி திட்டப்பணிகளை மத்திய அரசின் பயிற்சி அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதியில் இருந்து பூங்கா, கழிவறை அமைத்தல், தொகுப்பு வீடுகள் கட்டுதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் டெல்லியை சேர்ந்த மத்திய அரசின் 7 பேர் கொண்ட பயிற்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் வேலூர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் நேற்று வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு உட்பட்ட வெங்கடாபுரம் பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்தை பார்வையிட்டனர். மேலும் அங்கு உரம் தயாரிக்கும் முறையையும் பார்வையிட்டனர். தொடர்ந்து பூங்கா, தொகுப்பு வீடு உள்ளிட்ட பணிகளையும் அவர்கள் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்போது வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ்பாபு, ஊராட்சி மன்ற தலைவர் பாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் செயல்படும் பல துறைகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரிகள் நிர்வாகத்திறன் வளர்த்துக்கொள்ள பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வேலூரில் நடந்துள்ள அரசின் திட்டப்பணிகளை இக்குழுவினர் பார்வையிட்டனர் என்றனர்.