கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் சிறையில் அடைப்பு
கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, துங்கபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் ஆகாஷ்(வயது 22). சம்பவத்தன்று இவர் 22 வயதுடைய மாணவி கல்லூரிக்கு அரசு பஸ்சில் சென்றபோது, அவரின் கல்லூரி அடையாள அட்டை, செல்போனை பறித்ததாகவும், பின்னர் அந்த கல்லூரி மாணவி ஆகாசிடம் இருந்து தன்னுடைய கல்லூரி அடையாள அட்டை, செல்போனை வலுக்கட்டாயமாக வாங்கி விட்டதாகவும் தெரிகிறது.இதையடுத்து ஆகாஷ் அந்த கல்லூரி மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனால் கல்லூரி மாணவி தேர்வு எழுத முடியாமல் வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஆகாஷ், கல்லூரி மாணவியை தன்னுடன் வருமாறு கத்தியை அவரது கழுத்தில் வைத்து மிரட்டியதாகவும், இதனை கண்ட அருகில் இருந்த கல்லூரி மாணவர்கள் தட்டிக்கேட்டபோது, ஆகாஷ் அந்த மாணவியை சாதி பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆகாஷ் அந்த மாணவி பிளஸ்-1 படிக்கும்போதே தன்னை காதலிக்குமாறு கூறியும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக அந்த கல்லூரி மாணவி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கொலை மிரட்டல், போக்சோ, தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ஆகாசை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.