வாலிபால் கம்பத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
செஞ்சி அருகே விளையாட்டு மைதானத்தில் உள்ள வாலிபால் கம்பத்தில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்
செஞ்சி
வாலிபர்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் சக்கரை மகன் தணிகைவேல்(வயது 20). வெல்டிங் வேலை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் தணிகைவேலுவை காணவில்லை. இந்நிலையில் நேற்று காலை அதே ஊரில் வாலிபால் விளையாட்டு மைதானத்தில் உள்ள வாலிபால் மரக்கம்பத்தில் தணிகைவேல் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
போலீசாருடன் வாக்குவாதம்
பின்னர் இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அனந்தபுரம் போலீசார் விரைந்து வந்து பிரேத பரிசோதனைக்காக தணிகைவேலுவின் உடலை மீட்க முயன்றபோது அவர்களை தணிகைவேலுவின் உறவினர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரை யாரோ மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தணிகைவேலுவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாவில் சந்தேகம்
தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக சக்கரை கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபால் கம்பத்தில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் காரை கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.