தீக்குளித்து வாலிபர் தற்கொலை
காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுப்பேட்டை,
சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி மேட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து. இவரது மகன் நரேஷ் (வயது 30). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், நரேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இருவரும் ஒருவரை ஒருவர் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
திருமண நிச்சயதார்த்தம்
அதன்படி அந்த இளம்பெண்ணுக்கும், பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த 14-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் மனவேதனையுடன் நரேஷ் வீரப்பெருமாநல்லூருக்கு சென்றார். பின்னர் காதலியை மறக்க முடியாமல் தவித்த நரேஷ், அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து அங்கமுத்து அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.