அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த வாலிபர் பலி
குடியாத்தம் அருகே அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
குடியாத்தம் அருகே உள்ள சீவூர் மேட்டுக்களம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் பரத்பாண்டியன் (வயது 24). இவரும் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை பரத்பாண்டியன் தனது வீட்டு அருகே உள்ள நிலத்திற்கு சென்றார் அப்போது நிலத்தில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்து இருந்தது. இதனை கவனிக்காமல் சென்ற பரத்பாண்டியன் தவறுதலாக மின்கம்பியை மிதித்தார் இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
நிலத்திற்குச் சென்ற பரத்பாண்டியன் வீட்டுக்கு வராததால் வீட்டில் உள்ள அவரது பெற்றோர் நிலத்துக்குச் சென்று பார்த்தனர் அப்போது பரத்பாண்டியன் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், மின்வாரியத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.