சிரசு திருவிழா பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் வழக்கமான வழியில் பக்தர்களை அனுமதிக்கக் கோரி தர்ணா


சிரசு திருவிழா பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் வழக்கமான வழியில் பக்தர்களை அனுமதிக்கக் கோரி தர்ணா
x

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டவர்கள் வழக்கமான பாதையில் பக்தர்களை அநுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

ஆலோசனை கூட்டம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், திங்கட்கிழமை சிரசு ஊர்வலமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் லட்சுமணன் தலைமை தாங்கினார். குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு வரவேற்றார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கோவிலுக்கு வெளிப்புறமாக...

கூட்டத்தில் சிரசு திருவிழாவின் போது கோவிலுக்குள் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களை நெரிசல் இன்றி பாதுகாப்பாக அனுமதிப்பது குறித்தும், அதற்காக ஏற்படுத்தியிருக்கும் வழிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் இந்த ஆண்டு கோவிலுக்கு வெளிப்புறமாக வழிகள் அமைத்து பக்தர்களை தங்கு தடை இன்றி பின்புறம் வழியாக உள்ளே அனுமதிக்க உள்ளதாக தெரிவித்தார். அதற்கு ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் வழக்கமான வழியிலேயே பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தர்ணா போராட்டம்

அப்போது பேசிய போலீஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளே வரும்போது நெரிசல் அதிகரிக்கும். கடந்த ஆண்டு நெரிசல் அதிகமாக இருந்ததை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நெரிசல் இல்லாமல் பக்தர்களை அனுமதிக்க இந்த முறை ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அப்போது பொதுமக்கள், விழா குழுவினர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திடீரென பொதுமக்கள் கோவில் வாசப்படியில் அமர்ந்து வழக்கமான வழியில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அழைத்து வந்தனர். அதைத்தொடர்ந்து மீண்டும் கூட்டம் நடைபெற்றது. அப்போது வழக்கமான வழியில் பக்தர்கள் நெரிசல் இன்றி அம்மனை தரிசிக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் டவுன் லட்சுமி, போக்குவரத்து முகேஷ் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வழக்கமான வழியில் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story