சாலை விபத்தில் வாலிபர் பலி
வி.கைகாட்டி அருகே நடந்த சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் அவரது தாய் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
அரியலூர் மாவட்டம், கடுகூர் தெற்கு தெருவை சேர்ந்த ராஜதுரை மனைவி பூங்கோதை (வயது 43). இவர்களது மகன் சதீஷ்(23). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மொபட்டில் கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க வயலுக்கு கடுகூர்-அயன்ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அஸ்தினாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த சின்னப்பா மகன் வேல்முருகன் (31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக, சதீஷ் ஓட்டிசென்ற மொபட் மீது மோதியது. இதில் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த பூங்கோதை, சதீஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாவு
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் பூங்கோதை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.