இடிபாடுகளில் சிக்கி வாலிபர் சாவு
இடிபாடுகளில் சிக்கி வாலிபர் சாவு
கும்பகோணம்
பட்டீஸ்வரம் அருகே சேதமடைந்த தொகுப்பு வீட்டை இடித்த போது இடுபாடுகளில் சிக்கி வாலிபர் இறந்தார்.
கும்பகோணம் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தொகுப்பு வீட்டை இடிக்கும் பணி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தென்னூர் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் பிரபு (வயது 33). இவர்,அந்த பகுதியில் உள்ள தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தான் வசித்து வரும் தொகுப்பு வீட்டின் கட்டிடம் சேதமடைந்ததால் அதனை இடித்து விட்டு புதிதாக கட்ட திட்டமிட்டார்.
சேதமடைந்த தொகுப்பு வீட்டை இடிப்பதற்காக தனது மாமா மகனான கும்பகோணம் மேலக்காவேரி பட்டக்கால் தெரு பகுதியை சேர்ந்த லெட்சுமணன் மகன் பிரகாஷ்(29) என்பவரை அழைத்து வந்தார். இருவரும் சேர்ந்து அந்த தொகுப்பு வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கி சாவு
பிரபு கட்டிடத்தின் வெளிப்பக்கம் நின்றும், பிரகாஷ் கட்டிடத்தின் உள்ளே நின்றும் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். நேற்று மதியம் 1 மணி அளவில் தொகுப்பு வீட்டின் சேதமடைந்த கான்கிரீட் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. அப்போது கட்டிடத்தின் உள்ளே வேலை பார்த்துக்கொண்டு இருந்த பிரகாஷ் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பொக்லின் எந்திரம் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி, அதில் சிக்கி இருந்த பிரகாசை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரகாசை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.