கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் மகேந்திரன் (வயது 19). இவர் தனது நண்பர்களுடன் அதே ஊரில் உள்ள சிங்காரம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மகேந்திரன் நீரில் மூழ்கினார். இது குறித்த தகவலின் பேரில் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடினர். இதில் மகேந்திரனை பிணமாக மீட்டனர். அப்போது மகேந்திரனின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து மகேந்திரன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.