பெண்ணாடத்தில் திருடுபோன மோட்டார் சைக்கிளை சமூக வலைதள உதவியுடன் கண்டுபிடித்த வாலிபர்
பெண்ணாடத்தில் திருடுபோன மோட்டார் சைக்கிளை சமூக வலைதள உதவியுடன் கண்டுபிடித்த வாலிபர், திருடிய 3 சிறுவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் வள்ளியம்மன் நகரை சேர்ந்தவர் உசேன் மகன் ஷாஜகான் (26). இவர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வைத்திருந்தார். கடந்த 23-ந்தேதி தனது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், ஷாஜகான் தனது நண்பர்கள் உதவியுடன், சமூகவலைதளங்களில் தனது மோட்டார் சைக்கிளின் படத்தை வெளியிட்டு திருடு போனது குறித்தும், இதை யாரேனும் பார்த்தால் தகவல் தரும்படி தனது செல்போன் எண்ணுடன் பதிவிட்டு இருந்தார்.
இதில் விருத்தாசலத்தை சேர்ந்த ஷாஜகானின் நண்பர்கள், அவரது மோட்டார் சைக்கிள் அந்தப் பகுதியில் இருப்பதாக ஷாஜகானுக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற ஷாஜகான் தனது மோட்டாா் சைக்கிளுடன் நின்றிருந்த 3 சிறுவர்களை பிடித்து பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து அந்த சிறுவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.