கள்ளக்காதலி கண் எதிரே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மேல்மலையனூரில் கள்ளக்காதலி கண் எதிரே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேல்மலையனூர்:
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு சஞ்சீவிராயன் கோவிலை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் தாமோதரன்(வயது 33). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாக்கியா. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பக்கத்து கிராமமான ராணிப்பேட்டையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மனைவி செவ்வந்தி(29). இவருக்கும் 2 குழந்தைகள் உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தாமோதரன் கூலிவேலைக்கு சென்றபோது செவ்வந்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.
தூக்கில் தொங்கினார்
இந்த நிலையில் கடந்த மாதம் 20-ந் தேதி மாலை தாமோதரனும், செவ்வந்தியும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு, அருகில் உள்ள விவசாய நிலத்தில் இருவரும் அமர்ந்து இரவு முழுவதும் பேசிக்கொண்டிருந்தனர்.
பின்னர் 21-ந் தேதி அதிகாலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். இதில் மனமுடைந்த தாமோதரன், கள்ளக்காதலி கண்எதிரே வேப்பமரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செவ்வந்தி, அவரை மீட்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனால் அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார்.
சாவு
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, தாமோதரனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக தாமோதரன், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தாமோதரன் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாமோதரன் மனைவி பாக்கியா கொடுத்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.