தொழிலாளியை மதுபாட்டிலால் சரமாரியாக குத்திக்கொன்ற வாலிபர்
மனைவியை தவறாக பேசியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர், தொழிலாளியை மதுபாட்டிலால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பனைக்குளம்,
மனைவியை தவறாக பேசியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர், தொழிலாளியை மதுபாட்டிலால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழிலாளி கொலை
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 38). கட்டிட கூலி தொழிலாளி. இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக அலெக்ஸ் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் உச்சிப்புளி அலைகாத்த வலசை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தென்னந்தோப்பில் ரத்த வெள்ளத்தில் அலெக்ஸ் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை மற்றும் உச்சிப்புளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அலெக்ஸ் உடலை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
விசாரணையில், சம்பவத்தன்று இரவு அலெக்ஸ், தன்னுடன் வேலை செய்துவந்த உச்சிப்புளி பசும்பொன் நகரை சேர்ந்த முருகேசன் என்ற பிரபுவுடன் (23) மது குடிக்க சென்றார். தோப்பில் மது குடித்தபோது போதையில் பிரபுவின் மனைவி குறித்து அலெக்ஸ் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் பிரபு மதுபாட்டிலை உடைத்து அலெக்சை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அலெக்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தன. இதையடுத்து பிரபுவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.