2 பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபர்
நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பஸ் மீது கல்வீச்சு
நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து வடசேரி பஸ் நிலையத்துக்கு நேற்று காலை 6 மணிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து வேப்பமூடு மாநகராட்சி பூங்கா நோக்கி சென்ற போது திடீரென ஒரு வாலிபர் பஸ் மீது கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது. உடனே டிரைவர் பஸ்சை அங்கேயே நிறுத்தினார். இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அவசர, அவசரமாக கீழே இறங்கினர். ஆனால் கல்வீசிய வாலிபர் அங்கிருந்து செல்லாமல் எந்தவொரு பதற்றமின்றி பஸ்சை மறித்தவாறு நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது, அதே பகுதியை சேர்ந்த அவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து உறவினர்களை வரவழைத்து அந்த வாலிபரை ஒப்படைத்தனர்.
மற்றொரு சம்பவம்
பின்னர் அதே இடத்தில் மீண்டும் ஒரு அரசு பஸ் மீது அந்த வாலிபர் கல்வீசி தாக்கிய சம்பவம் நடந்தது. அதாவது காலை 8 மணிக்கு குளச்சல் நோக்கி சென்ற பஸ் மீது கல்வீசியதில் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. இந்த தாக்குதலை நடத்தியதும் வாலிபர் வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.
பின்னர் கோட்டார் போலீசார் மீண்டும் அங்கு வந்து வாலிபரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தானே சுவரில் மோதி காயம் ஏற்படுத்திக் கொண்டார். இதை பார்த்த போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். பின்னர் அந்த வாலிபரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கும்படி கூறி சென்றனர். இதையடுத்து அந்த வாலிபர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பஸ்கள் மீது வாலிபர் கல்வீசி தாக்கிய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.