திருச்செந்தூரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி


தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கல்வி அலுவலகத்தை காலி செய்வதை கண்டித்து திருச்செந்தூரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலகத்துடன் இணைக்க உத்தரவிடப்பட்டது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், நேற்று மாவட்ட கல்வி அலுவலகத்தை காலி செய்து அதில் உள்ள பொருட்களை தூத்துக்குடிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதற்காக 2 லாரிகளில் பொருட்களை கொண்டு செல்லும் பணி நடந்தது. இதனையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமையில் அக்கட்சியினர் பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்ததும் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், தாலுகா இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த மக்கள் நலன் காக்கும் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் திருப்பதி தனது கையில் 5 லிட்டர் பெட்ரோல் கேனுடன் தீக்குளிப்பதற்காக வந்தார். உடனடியாக போலீசார் அவரிடமிருந்து பெட்ரோல் கேனை பறித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடு்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story