திருத்தணி அருகே தந்தை, மகன் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் வாலிபர் கைது


திருத்தணி அருகே தந்தை, மகன் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் வாலிபர் கைது
x

திருத்தணி அருகே தந்தை, மகன் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருத்தணியை அடுத்த பட்டாபிராமபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை அருங்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றார். அப்போது திருத்தணி ஆறுமுக சுவாமி தெருவை சேர்ந்த தினேஷ் (30) என்பவருடன் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் கனகராஜ் வீடு திரும்பினார்.

கனகராஜ் மீது கோபத்தில் இருந்த தினேஷ் தனது நண்பர்களான காசிநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சொக்கு என்ற சுப்பிரமணி (34), குமார் (30) ஆகியோருடன் பட்டாபிராமபுரம் கிராமத்திற்கு சென்று கனகராஜ், அவரது மகன் குணாளன், உறவினர் சரஸ்வதி ஆகியோரை அரிவாளால் சரமாரியாக தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

படுகாயமடைந்த 3 பேரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின்படி, திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் போலீசார் தப்பியோடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் அருகே பதுங்கி இருந்த தினேஷை போலீசார் கைது செய்தனர், பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட தினேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக இருக்கும் மற்ற 2 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story