காதலியை பார்க்கச் சென்ற வாலிபர் அடித்துக் கொலை: சாக்கு மூட்டையில் கட்டி முட்புதரில் வீசிய கொடூரம்..!
திண்டுக்கல் அருகே காதலியை பார்க்கச் சென்ற இடத்தில் வாலிபரை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 50) சின்னப்பொண்ணு (48). இவர்களது மகன் அஜித்குமார் (25) பர்னிச்சர் வேலை செய்து வருகிறார். இவரும், இவரது உறவினரும் நண்பருமான, இதே ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி (65) பாப்பா (48) இவர்களது மகன் அழகு விஜய் (23) இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.
நண்பர்களான அஜித்குமாரும், அழகு விஜய்யும் ஒன்றாக சுற்றி வருவது வழக்கம். இந்நிலையில், நண்பர் அஜீத்குமாரை பார்க்க இவரது வீட்டிற்கு அழகு விஜய் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, அஜீத்குமாரின் தங்கையுடன் அழகு விஜய்க்கு பழக்கம் ஏற்படுகிறது. நாளடைவில், அது காதலாக மாறியது.
இந்நிலையில் இருவரும் காதலிப்பது அவரது அண்ணன் அஜித்குமாருக்கு தெரியவந்தது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியதை பார்த்து, கண்டுபிடித்த அஜித்குமார் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களது காதல் தொடர்ந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு அஜித்குமாரின் தாயார் சின்னப்பொண்ணு ராமேஸ்வரம் சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட காதலர்கள் வீட்டில் தனியாக சந்திக்க முடிவு செய்துள்ளனர். இரவு சுமார் 11 மணி அளவில் அழகு விஜய் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு திடீரென வந்த அஜித்குமார் இருவரையும் கண்டித்துள்ளார். அப்போது, நண்பர்கள் அஜித்குமாருக்கு அழகு விஜய்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அஜித்குமார் கட்டையால் அழகு விஜயை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அழகுவிஜய் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். பின்னர், ஒரு சாக்கில் அழகு விஜய் உடலை போட்டு கட்டி, இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் ஆத்தூர் அருகே காமராஜர் அணை பகுதியில் உள்ள முட்புதரில் அவரது உடலை வீசி விட்டு அஜித்குமார் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முட்புதரில் சாக்கு மூட்டையில் கிடந்த அழகு விஜய் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
படுகொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பரின் தங்கையான, தன் காதலியை பார்க்க சென்ற இடத்தில், வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.