கோவில் திருவிழாவில் ஓட ஓட விரட்டி வாலிபர் குத்திக்கொலை
கந்திலி அருகே நிலத்தகராறு காரணமாக கோவில் திருவிழாவில் வைத்து வாலிபர் ஓடஓட விரட்டி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கந்திலி அருகே நிலத்தகராறு காரணமாக கோவில் திருவிழாவில் வைத்து வாலிபர் ஓடஓட விரட்டி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தகராறு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த நரியனேரி ஊராட்சி கொண்டநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சேட்டு மகன் நரசிம்மன் (வயது 30). அதேப் பகுதியை சேர்ந்தவர் ராஜா (60). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மங்கைக்கு நந்தினி (32) என்ற மகளும், யுவராஜ் (30), கார்த்திக் (24) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இரண்டாவது மனைவி வளர்மதிக்கு அனிதா (27), அகிலா (24) என்ற மகள்களும், அஜித் (24) என்ற மகனும் உள்ளனர்.
ராஜாவின் இரண்டாவது மனைவி மகளான அனிதாவை நரசிம்மன் 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். அவர்கள் ராஜாவின் 2-வது மனைவியின் மகன், மகளுடன் வசித்து வந்துள்ளனர். ராஜா தனக்கு சொந்தமான நிலத்தை விற்று விட்டதாக தெரிகிறது. அதனை பெரியசாமி என்ற நபரிடமிருந்து நரசிம்மன் வாங்கி உள்ளார். இதனால் தனது சொத்தை மருமகனே வாங்கி விட்டாரே என்ற ஆத்திரத்தில், நரசிம்மன் மற்றும் அனிதாவிடம், ராஜா தனது பெயரில் நிலத்தை எழுதி வைக்கக் கோரி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
குடும்பத்துடன் கொலைசெய்ய முயற்சி
இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுட்டுள்ளது. அத்துடன் நரசிம்மன் குடும்பத்தை கொலை செய்ய முடிவு செய்த ராஜா மற்றும் முதல் மனைவியின் மகன்களான யுவராஜ், கார்த்திக் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நரசிம்மன் வீட்டு சமையலறையின் மேல் 30 ெஜலட்டின் குச்சிகளை கட்டிவிட்டு, 500 மீட்டர் தொலைவில் உள்ள மின்கம்பத்தில் வயர் மூலம் இணைப்பு கொடுத்தனர். அப்போது கடும் மழை பெய்ததன் காரணமாக ஜெலட்டின் குச்சிகள் மழையில் நனைந்தது.
அப்போது வீட்டின் மேல் இருந்து யாரோ குதித்து ஓடும் சத்தம் கேட்டு சேட்டு பார்த்தபோது வீடு முழுவதும் ஜெலட்டின் குச்சிகளுடன் வயர்கள் இணைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜா மற்றும் அவருடைய மகன் கார்த்திக், யுவராஜ், ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓடஓட விரட்டி குத்திக்கொலை
இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் அதிகரித்தது. ஜாமீனில் வந்த யுவராஜ் சென்னையில் கடைவைத்துள்ளார். இந்த நிலையில் ஊரில் நடந்த மாரியம்மன் திருவிழாவில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக யுவராஜ் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ளார். இரவில் கோவிலில் அவர் நாட்டிய நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்த ராஜாவின் 2-வது மனைவியின் மகனான அஜித் மற்றும் 2 பேர், யுவராஜை கத்தியால் குத்தி உள்ளனர். இதனால் தப்பி ஓடிய யுவராஜை அவர்கள் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இதனால் நாட்டிய நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். யுவராஜை கொலை செய்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கந்திலி போலீசார் யுவராஜ் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
3 பேர் கைது
மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அஜித் மற்றும் 2 பேரை தனிப்படை போலீசார் வலை வீசி தேடிவந்தனர். இந்த நிலையில் கந்திலி அருகே உள்ள செவ்வாத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த சேட்டு மகன் நரசிம்மன் (30), நரசிம்மனின் உறவினர் சின்னக்கண்ணு மகன் அன்பழகன் (42), ராஜா மகன் அஜித் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் ஏற்கனவே இரண்டு குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததில் எங்கள் வீட்டில் டெட்டனேட்டர் வைத்து குடும்பத்தினரை கொல்ல முயற்சி செய்தனர். மேலும் யுவராஜ், எங்களது குடும்பத்தை கொல்ல திட்டமிட்டது எனக்கு தெரியவந்தது. ஆகையால் யுவராஜை குத்தி கொலை செய்தோம் என அவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர். நிலத் தகராறு காரணமாக கோவில் திருவிழாவில் அண்ணனை, தம்பி ஓட ஓட விரட்டி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.