போலீசாரை தாக்கிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
வேலூர் கோட்டை முன்பு போலீசாரை தாக்கிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூர் கோட்டையில் கடந்த 13-ந் தேதி வாலிபர்கள் சிலர் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வேலூர் முள்ளிபாளையத்தை சேர்ந்த முபாரக் (வயது 25) என்பவர் அந்த வாலிபர்களுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஒரு வாலிபரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து முபாரக் தப்பியோடினார். மேலும் அவர் கோட்டை முன்பு காந்திசிலை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கலாட்டாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ்காரர்கள் பாலாஜி, தமிழரசு ஆகியோர் அங்கு சென்று அவரை தடுத்தனர். இதில் ஆத்திரமடைந்த முபாரக் அங்கிருந்து பானிபூரி கடையின் கண்ணாடியை உடைத்து 2 போலீசாரையும் கண்ணாடி துண்டுகளால் குத்தி, காயம் ஏற்படுத்தினார். இதையடுத்து முபாரக்கை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
அவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முபாரக்கை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் முபாரக்கை குண்டர்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான ஆணையை இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஜெயிலில் உள்ள முபாரக்கிடம் வழங்கினார்.