வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர்
செம்பட்டி அருகே வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார். அவருக்கு தர்ம அடி கொடுத்து கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
செம்பட்டி அருகே உள்ள பழைய செம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி (வயது 33). இவர், செம்பட்டியில் உள்ள ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். நேற்று இவர், தனது வீட்டு மாடியில் குடும்பத்தினருடன் இருந்தார். அப்போது சட்டை அணியாமல், டவுசருடன் 25 வயது வாலிபர் ஒருவர் அவரது வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் வீட்டுக்குள் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செல்போனை திருடி கொண்டு வெளியே வந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் 'திருடன் திருடன்' என சத்தம் போட்டனர்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை வீரமணி மடக்கி பிடித்தார். பின்னர் அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும் அந்த வாலிபரின் கைகளை கட்டியபடி நடந்தே அழைத்து சென்று, ெசம்பட்டி போலீஸ் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ஈரோட்டை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. தன்னுடைய செல்போனை யாரோ ஒருவர் திருடி சென்று விட்டதாகவும், இதனால் பிறருடைய செல்போன்களை திருடுவதாக அவர் தெரிவித்தாக போலீசார் கூறினர். பொதுமக்களிடம் சிக்கிய அவர் செல்போன் திருடுவதற்காக மட்டும் வீட்டுக்குள் புகுந்தாரா? என்றும், அவரது கூட்டாளிகள் யாரேனும் இருக்கிறார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.