நடிகர் போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த வாலிபர்


நடிகர் போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த வாலிபர்
x

உதவி செய்வதுபோல் நடித்து நடிகர் போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மருந்து வாங்க கொடுத்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி நகை வாங்கியதால் சிக்கினார்.

போரூர்,

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி. இவர், சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கடந்த சில மாதங்களாக 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உயிருக்கு போராடும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என காமெடி நடிகர் பெஞ்சமின், சமூக வலைதளத்தில் கண்ணீருடன் வீடியோ பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போண்டா மணியை ஆஸ்பத்திரியில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவருக்கு தேவையான அனைத்து உயர் சிகிச்சையும் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் அவருக்கு அரசியல் கட்சியினர், சினிமாத்துறையை சேர்ந்தவர்களும் உதவி செய்தனர்.

கடந்த மாதம் 27-ந் தேதி போண்டா மணி, ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். தற்போது அவர், அய்யப்பன்தாங்கலில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

உதவிகள் செய்தார்

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வரும்போது, அவரது ரசிகர் என்று கூறி, திருப்பூர் மாவட்டம், வீரபாண்டியை சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ் (34) என்பவர் உடல் நலம் விசாரிப்பது போல் நடிகர் போண்டா மணியிடம் பழகினார். ஆஸ்பத்திரியில் அவருக்கு சிறு சி்று உதவிகளையும் செய்து வந்தார். ஆஸ்பத்திரியில் இருந்து போண்டா மணி வீடு திரும்பியதும் அவருடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் உடன் வந்தார்.

அப்போது போண்டா மணியின் மனைவி மாதவி, தனது கணவரின் ஏ.டி.எம். கார்டை ராஜேஷ் பிரித்தீவ்விடம் கொடுத்து, மருந்து வாங்கி வருமாறு கூறினார். அவரும் ஏ.டி.எம். கார்டை வாங்கிக்கொண்டு மருந்து கடைக்கு சென்றார்.

ரூ.1 லட்சத்துக்கு நகை

அவர் சென்ற சிறிது நேரத்தில் சென்னையில் உள்ள பிரபல நகை கடையில் அந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 941 மதிப்புள்ள நகை வாங்கியதாக மாதவியின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு ஏ.டி.எம். கார்டுடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் தலைமறைவாகி விட்டார்.

பின்னர்தான் நடிகை போண்டா மணி மற்றும் அவரது மனைவிக்கு ராஜேஷ் பிரித்தீவ் தங்களுக்கு உதவி செய்வதுபோல் நடித்து மோசடி செய்ததை அறிந்தனர். உடனே சுதாரித்து கொண்ட மாதவி, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவித்து அந்த ஏ.டி.எம். கார்டை முடக்கும்படி தெரிவித்தார். ேமலும் இதுகுறித்து போரூர் போலீசில் புகார் அளித்தார்.

வாலிபர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையிலான போலீசார், அந்த நபரின் செல்போன் எண் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராஜேஷ் பிரித்தீவ்வை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அதில், போண்டா மணியிடம் அவர், தன்னை இலங்கைத்தமிழர் என்றும், அகதிகள் முகாமில் தங்கி இருப்பதாகவும், உங்களுக்கு மாற்று சிறுநீரகம் ஏற்பாடு செய்வதாகவும் கூறி பழகி உள்ளார். ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்த அன்று, மருந்து வாங்குவது போல் போண்டா மணியின் ஏ.டி.எம். கார்டை வாங்கிச்சென்று நகைக்கடை ஒன்றில் 21 கிராம் நகையை வாங்கினார். பின்னர் மற்றொரு கடையில் பொருட்கள் வாங்குவதற்குள் அந்த ஏ.டி.எம். கார்டு முடக்கப்பட்டதால் அதன்பிறகு தலைமறைவானதும், புதிதாக வாங்கிய நகையை அடகு வைத்து பணத்தை பெற்றதும் தெரியவந்தது.

மேலும் இவர் தினேஷ், சிவராம குரு, தீனதயாளன், ராஜேஷ், பெருமாள் என பல்வேறு பெயர்களில் பல ஊர்களில் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இவர் மீது கோவை மாவட்டம் கருமத்தூர், கோவை ெரயில்வே போலீஸ், சென்னை எழும்பூர் உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 21 கிராம் நகையை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story