பள்ளத்திற்குள் மோட்டார் சைக்கிளுடன் பாய்ந்த வாலிபர் படுகாயம்


பள்ளத்திற்குள் மோட்டார் சைக்கிளுடன் பாய்ந்த வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திங்கள்சந்தை அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பதாகையை கவனிக்காததால் ரெயில்வே பாலப்பணிக்கு தோண்டிய பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் பாய்ந்த வாலிபர் படுகாயமடைந்தார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பதாகையை கவனிக்காததால் ரெயில்வே பாலப்பணிக்கு தோண்டிய பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் பாய்ந்த வாலிபர் படுகாயமடைந்தார்.

ரெயில்வே பாலப்பணி

திங்கள்சந்தை அருகே நெய்யூர்-பரம்பை பகுதிக்கு இடையே ெரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

இதேபோல் வட்டம், அழகியமண்டபம் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் திங்கள் சந்தை ரவுண்டானாவில் இருந்து இரணியல் சந்திப்பு, ஆழ்வார்கோவில் வழியாக செல்ல அறிவிப்பு பதாகைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளுடன் பாய்ந்தார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மார்த்தாண்டம் சாங்கை பகுதியைச் சேர்ந்த வர்க்கீஸ் என்பவருடைய மகன் அஜிஷ் (வயது26) திங்கள்சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். திங்கள்சந்தையில் இருந்து நெய்யூர் வழியாக வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது, நெய்யூர் தனியார் மருத்துவமனை அருகில் வைத்துள்ள அறிவிப்பு பதாகையை அஜிஷ் கவனிக்கவில்லை.

இதனால், மாற்றுப்பாதையில் செல்லாமல் அவர் சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்மேட்டின் மீது மோதி பாலப்பணி நடைபெறும் பள்ளத்திற்குள் மோட்டார் சைக்கிளுடன் பாய்ந்தார். இதில் பலத்த காயமடைந்த அஜிஷ் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் உடனே படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் இரணியில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story