ஓடும் ரெயிலில் இருந்து குதித்த வாலிபரால் பரபரப்பு


ஓடும் ரெயிலில் இருந்து குதித்த வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த வாலிபர் இரவு முழுவதும் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வாலிபரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த வாலிபர் இரவு முழுவதும் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வாலிபரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தண்டவாளத்தில் ரத்தக்கறை

நாகர்கோவில் ஒழுகினசேரி ரெயில்வே பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஒரு ஆண் காயங்களுடன் கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

உடனே ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லை. ஆனால் அங்கு ரத்த கறைகள் படிந்திருந்தன. மேலும் ஒரு செல்போனும் கிடந்தது.

மதுரையை சேர்ந்தவர்

அந்த செல்போனில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரணை நடத்திய போது, கீழே கிடந்த செல்போன் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த மதுரை சப்தநேரி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 22) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.

பின்னர் அவரை ஒரு மணி நேரம் அந்த பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் திரும்பி சென்று விட்டனர்.

இதற்கிடையே நேற்று அதிகாலையில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் ஒருவர் காயங்களுடன் கிடந்தார். அவரை ரெயில்வே போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பிறகு அவர் தான் பாண்டியராஜன் என்பதை உறுதி செய்தனர்.

ரெயிலில் இருந்து குதித்தார்

மதுரையில் இருந்து ரெயிலில் ஏறிய பாண்டியராஜன் நண்பரை பார்க்க நாகர்கோவிலுக்கு புறப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியில் அசதியில் தூங்கி விட்டார். அந்த சமயத்தில் ரெயில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.

அப்போது தூக்கத்தில் இருந்து கண்விழித்த பாண்டியராஜன், தான் இறங்க வேண்டிய இடத்தை ரெயில் கடந்து விட்டதே என நினைத்து திடீரென பதற்றத்துடன் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து விட்டார். இதனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன.

அந்த சமயத்தில் செல்போன் கீழே விழுந்து விட்டது. பிறகு அதனை தேடி பார்த்துள்ளார். இருட்டாக இருந்ததால் அவரால் செல்போனை கண்டுபிடிக்கவில்லை. உடனே காயங்களுடன் கோட்டார் ரெயில் நிலையம் நோக்கி நடந்து சென்ற அவர் இடையில் வலி ஏற்படவே ஓரத்தில் உட்கார்ந்துள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கேயே மயங்கி கிடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இதுதொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசார் பாண்டியராஜனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story