குடிபோதையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சூறையாடிய வாலிபர் கைது
திருநாவலூரில் குடிபோதையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சூறையாடியவரை போலீசார் கைது செய்தனர்
உளுந்தூர்பேட்டை
குடிபோதையில்
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா பிசோய்(வயது 30). இவர் சம்பவத்தன்று குடிபோதையில் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த அரசு ஊழியர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.
மேலும் அங்கிருந்த கணினி, நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களை உடைத்து சூறையாடினார். இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வாலிபரை தாக்கினார்
இதை தடுக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்(25) என்பவரையும் கிருஷ்ணா பிசோய் ஆயுதத்தால் தாக்கினார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் சிகிச்சைக்காக திருநாவலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணா பிசோயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாலிபர் குடிபோதையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குள் புகுந்து சூறையாடிய சம்பவம் திருநாவலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.