பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை
8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாலியல் பலாத்காரம்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வகணபதி (வயது 22). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வகணபதியை கைது செய்தனர்.
வாழ்நாள் சிறை
இந்தவழக்கின் விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த செல்வகணபதிக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதம் கட்டத்தவறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, செல்வகணபதியை பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இதில் அரசு தரப்பில் வக்கீல் ராஜா ஆஜராகி வாதாடினார்