விவசாயியை சுட்டுக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை


விவசாயியை சுட்டுக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 23 Jun 2023 12:52 AM IST (Updated: 23 Jun 2023 4:53 PM IST)
t-max-icont-min-icon

வேப்பங்குப்பம் அருகே விவசாயியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வாலிபருக்கு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

சுட்டுக்கொலை

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா வேப்பங்குப்பம் அருகே உள்ள மலை கிராமமான கட்டியாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 36), விவசாயி. இவரது உறவினர் ஒருவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் இறந்தார். அப்போது இறந்தவருக்கு இறுதிச்சடங்கு முடிந்து ஓரிரு நாட்களில் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சுரேஷ் (20) என்பவர் சம்பந்தப்பட்ட நபர் இறப்புக்கு நீதான் காரணம் எனக்கூறி உள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சாமிநாதனை நோக்கி சுட்டார். இதில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த சாமிநாதனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் இறந்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணைகள் நிறைவடைந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சுரேசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததற்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு குற்றவியல் வக்கீல் சரவணன் ஆஜரானார்.


Next Story