'லிப்ட்' கேட்டு வந்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற வாலிபர் கைது
‘லிப்ட்’ கேட்டு வந்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காட்டுப்புத்தூர்:
மயக்கமடைந்தார்
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள கொளக்குடியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 38). இவர் கரூரில் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று கரூரில் வேலையை முடித்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் மோகனூர் வழியாக கொளக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். வழியில் அவரிடம் ஒரு வாலிபர் தொட்டியம் செல்ல வேண்டும் என்று கூறி 'லிப்ட்' கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டார்.
பின்னர் அவர்கள் தொட்டியம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சதீஷ்க்குமாருக்கு மயக்கம் ஏற்படும் நிலை இருந்தது. இதனால் அவர், அந்த வாலிபரிடம் எனக்கு மயக்கம் வருவது போல் உள்ளது, தண்ணீர் வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர் சதீஷ்குமார் மயக்கமடைந்தார்.
கைது
இதையடுத்து அவரை அருகில் உள்ள கோவிலில் விட்டுவிட்டு, அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளுடன் மாயமானார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து பார்த்த சதீஷ்குமார், மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அவர் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மறுநாள் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் காட்டுப்புத்தூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்து, அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், கரூர் மாவட்டம் தளவாய்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(30) என்பதும், சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.