கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி,
ஊட்டியை சேர்ந்தவர் பிரதீப். இவர் நேற்று முன்தினம் ஊட்டி மார்க்கெட்டில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் வேண்டும் என்று கேட்டு உள்ளார். அதற்கு பிரதீப் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி, பிரதீப்க்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றார். இதுகுறித்து பிரதீப் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாகமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பிரதீப்பை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது காந்தல் குருசடி காலணியை சேர்ந்த ராஜேஷ் (வயது 35) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, ராஜேஷை கைது செய்தனர்.